Published : 13 Jan 2023 06:36 PM
Last Updated : 13 Jan 2023 06:36 PM
சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் குண்டு மல்லி கிலோ ரூ.1000 அதிகரித்து, கிலோ ரூ.2,500க்கு விற்பனையானது.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வஉசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும், இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமண முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக விலை ஏற்றம் கண்டுள்ளது. மார்கழி, தை மாதங்களில் பருவகால மாற்றத்தால் பனி பொழிவு அதிகளவு இருந்து வருகிறது.
பனியின் காரணமாக செடிகளில் மொட்டுகள் மலர்வதற்கு முன்பாகவே கொட்டி விடுகிறது. இதனால், குண்டுமல்லி உற்பத்தி வெகுவாக குறைந்த, சில ஆயிரம் கிலோ பூக்கள் மட்டுமே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், குண்டு மல்லி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.1500 விலையில் விற்பனையானது. ஒரே நாளில் குண்டு மல்லி கிலோவுக்கு ரூ.1000 விலை ஏற்றம் கண்டு, இன்று கிலோ ரூ.2,500க்கு விற்பனையானது.
நேற்று தொடுக்கப்பட்ட ஒரு முழம் குண்டுமல்லி ரூ.150 விலையில் விற்றது; இன்று தொடுக்கப்பட்ட ஒரு முழம் குண்டு மல்லி ரூ.300 விலையில் விற்பனையானது. பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொதுமக்கள், சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கலுக்கு வீடுகளில் பூஜை செய்து, வழிபாட நடத்த பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், பூக்கள் வரத்து குறைந்ததால், விலை ஏற்றம் தவிர்க்க முடியாதாகிவிட்டது. கடுமையாக பூக்கள் விலை உயர்ந்த நிலையில், பொதுமக்கள் பண்டிகைக்கு பூக்கள் வாங்குவதற்கு கூடுதல் செலவினமாவதால் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்): குண்டு மல்லி - 2500, முல்லை-2500, ஜாதிமல்லி-1400, காக்கட்டான்- 1000, கலர் காக்கட்டான்-1000, வெள்ளை, மஞ்சள், சிகப்பு அரளி பூக்கள்- 400, நந்தியாவட்டம் -220, சம்பங்கி-100 என்ற விலைகளில் விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT