Published : 13 Jan 2023 05:41 PM
Last Updated : 13 Jan 2023 05:41 PM

பள்ளிவாசல்களுக்கான மானியம் ரூ.10 கோடியாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்பில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உறுப்பினர்களுக்கு கோரிக்கைளுக்கு முதல்வர் இன்று (ஜன.13) பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா, பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant (MRG) என்ற மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5 கோடியாக இருந்த இந்த மானியத் தொகையை கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சென்ற ஆண்டு, ரூ.6 கோடியாக உயர்த்தி வழங்கினோம். தற்போது, உறுப்பினரின் கோரிக்கையையேற்று, பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant-MRG மானியத் தொகை வரும் நிதியாண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

உறுப்பினர் வேல்முருகன் பேசும்போது, தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் குற்றச் சம்பங்களில் ஈடுபடுவது பற்றி விளக்கமாக, விரிவாக, உணர்ச்சியோடு குறிப்பிட்டு பேசினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள்மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கொலை வழக்குகள் 25; அவற்றில் 24 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தவிர, தமிழ்நாட்டில் தங்கிப் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரிக்கின்றது.

அவர்களை தமிழ்நாட்டில் பணியில் அமர்த்தும் மனித வள நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. வட மாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சந்தேகத்திற்குரியோரை அடையாளம் கண்டு, அந்தந்த மாநிலங்களின் போலீசாரிடமிருந்தும் அவர்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் உதவிகள் பெற்று மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார் என்றாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வட மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் சட்ட விரோத செயல்களில், குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க. மணி தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டுமென்பது குறித்து தனது கருத்துகளை இம்மாமன்றத்தில் எடுத்து வைத்தார். நேற்றைக்கு பொன்முடி அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அதேபோல, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். எனவே, அதைப்பற்றி அதிகம் நான் பேச வேண்டியதில்லை. இருந்தாலும், சுருக்கமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிக்காமல் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெறமுடியாது என்ற நிலையைக் கொண்டுவருவதற்குத்தான் கருணாநிதி “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்ற “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை” 13-6-2006 அன்று இயற்றி, தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.

அந்த வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை முழுமையாகப் பயிற்றுவிப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியான தமிழைக் கற்பதற்கு ஏதுவாக தமிழ் பரப்புரைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு தலைப்புகளில் 108 புதிய புத்தகங்களையும், குழந்தைகளுக்கான இளந்தளிர் நூல்களையும் கொண்டுவந்துள்ளதோடு, தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான 5 முக்கிய பன்னாட்டு மருத்துவ நூல்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் கொண்டு வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு, தனது தமிழ் காக்கும் பணிகளைத் தொடர்ந்து புதிய புதிய முன்னெடுப்புகளையெடுத்து சீரிய பணிகளை ஆற்றும் என்பதை உறுப்பினர்களுக்கு நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசும்போது, ஒரு கருத்தைச் சொன்னார். ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவாறு பேரூராட்சிகளிலும் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கும் ஐந்தில் ஒரு பங்கு வழங்கப்படவேண்டுமென்று என்ற ஒரு கோரிக்கையை வைத்தார். அதனையேற்று இந்தத் திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த ஏதுவான பேரூராட்சிகளில் மட்டுமல்ல; நகராட்சிகளிலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் குறிப்பிட்டுள்ள பயனாளிகள் வீடுகட்டி குடியேற இயலாத வகையில் மேடு பள்ளங்களாகவும், சாலை வசதி இல்லாமலும் காணப்படுவதாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா இடங்களில் அவர்கள் வீடுகள் கட்டி குடியேறத்தக்க வகையில் இல்லாத இடங்களின் விவரங்களையெல்லாம் மாவட்டம்வாரியாக சேகரிக்கப்பட்டு, எந்தெந்த இடங்களில் சமன்செய்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தகுதியானவை என்பதையறிந்து, உடனடியாக அதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதை நான் உறுப்பினருக்கு, இந்த அவைக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x