Published : 13 Jan 2023 12:03 PM
Last Updated : 13 Jan 2023 12:03 PM
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (ஜன.13) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
2 நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று (ஜன.13) காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இவர் வெள்ளி மற்றும் சனிக்கிழமை டெல்லியில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயணத்தின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பாரா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் குடியரசுத் தலைவரை ஆளுநர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேற்று (ஜன.12) சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரை நாங்கள் சந்தித்தோம். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றது கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT