Published : 13 Jan 2023 04:59 AM
Last Updated : 13 Jan 2023 04:59 AM
சென்னை: மாணவர்கள் படித்து முடித்து வேலைக்குச் சென்ற பின்னும் தங்களிடம் உள்ள கலைத் திறன்களை தொடர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா-2022-23 போட்டிகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட 206 கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் 13,210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28 லட்சத்து 53,882 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் 1,759 பேர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கலை திருவிழா போட்டிகளின் விருதுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும், போட்டிகளில் தரவரிசை அடிப்படையில் முதலிடம் பெற்ற 4 மாணவர்களுக்கு ‘கலையரசன்' விருதும், 4 மாணவிகளுக்கு ‘கலையரசி' விருதும் வழங்கி கவுரவித்தார். இதுதவிர, மாணவர்கள் வெற்றி விகிதத்தின்படி கோயம்புத்தூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தன. அதிக பங்கேற்பாளர்களைக் கொண்டதற்காக வேலூர் மாவட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வெற்றியின் முதல்படி: கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்கு உங்கள் தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் காரணமாகும். இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள்தான் நாளைய தமிழகத்தைப் பாதுகாக்க போகிற லட்சியவாதிகள். அதற்கு இந்த வெற்றியை முதல் படியாக எண்ணிட வேண்டும்.
பள்ளி, பாடநூல், வகுப்பறை தாண்டி பல்வேறு செயல்பாடுகள் வழியே மாணவர்களின் அறிவு மற்றும் கலைத் திறன்களை பள்ளிக்கல்வித் துறை ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், நமது மரபார்ந்த கலைகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதும் பாராட்டுக்குரியது.
பள்ளிக்கல்வியில் கலை மற்றும்பண்பாட்டு அம்சங்களை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் விரிவடையும். பிற செயல்பாடுகளை கற்பதால் முடிவெடுக்கும் திறனும் அதிகரித்து மாணவர்களும் தன்னம்பிக்கை பெறுவார்கள். அதேபோல், வாழ்வின் கடினமான நேரங்களில் நாம் கற்ற கலைகளே மனதுக்கு சிறந்த மருந்தாகும். அதை உணர்ந்தே மாணவர்களின் கல்வி, கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ‘எண்ணும் எழுத்தும்’ உட்பட பல்வேறு மகத்தான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. படிப்பு முடிந்ததும் வேலை, திருமணம், அதிக ஊதியம் என்பதுடன் முடிந்து விடாமல் கலைத் திறன்களையும் சேர்த்து வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ‘‘மாணவர்களுக்கு கல்வி மதிப்பெண் மட்டுமின்றி, வாழ்விலும் நல்ல மதிப்பைப் பெற அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கு இந்தகலைத் திருவிழா சிறந்த முன் னெடுப்பாக இருக்கும்.
மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா: கற்றல், கற்பித்தல் கொண்டாட்டமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரு கிறது. தரவரிசையின்படி முதல் 20 இடங்கள் பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு விரைவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்’’என்றார்.
விழாவில் அமைச்சர்கள் அர.சக்ரபாணி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், வி.செந்தில் பாலாஜி, கே.செஞ்சி மஸ்தான், தலைமை செயலர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT