Published : 13 Jan 2023 04:32 AM
Last Updated : 13 Jan 2023 04:32 AM

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் | முழு விவரம்

கடலுக்கு அடியில் தெரியும் மணற்திட்டுப் பாதை.(கோப்பு படம்)

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம், அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்த தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேது சமுத்திரத் திட்டம். இது தமிழகம் மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்த திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரவை இதை நிறைவேற்றித் தரவேண்டும்.

1860-ல் ரூ.50 லட்சத்தில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது இந்த திட்டம். 1955-ல் தமிழகத்தின் சிறந்த நிபுணர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையிலான குழு, 1963-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆகியவை பல ஆண்டுகள் ஆய்வுசெய்து, இந்த திட்டத்தை வடிவமைத்தன.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய், இந்த திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுக்கு அனுமதி அளித்தார். அப்போது திட்டத்தின் வழித்தடம் இறுதி செய்யப்பட்டது.

ரூ.2,427 கோடி மதிப்பில்...: அடுத்துவந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் 2004-ம் ஆண்டில் ரூ.2,427 கோடி மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் 2005 ஜூலை 2-ம் தேதி தொடங்கிவைத்தார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

எந்த காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது “ராமேசுவரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது, தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகும்.

எனவே, தாமதமின்றி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முன்வரவேண்டும். இதை செயல்படுத்த தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கும் என்று பேரவை ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து, மீனவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அதிமுகவும், திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பிலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ், பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மநேம, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x