Published : 13 Jan 2023 06:47 AM
Last Updated : 13 Jan 2023 06:47 AM

தமிழகத்தில் போதைப் பொருளை முற்றிலும் ஒழிப்பதே அரசின் லட்சியம்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருளைவேரடி மண்ணோடி ஒழிப்பதே அரசின் லட்சியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கரோனா காலத்தில் தங்கள்இன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 2,472 செவிலியர்கள் பணிபுரிந்தனர். அவர்கள் கடந்த மாதம்30-ம் தேதி வேலையில் இருந்துநீக்கப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ஆள் தேர்வு செய்யும்போது, இவர்களுக்கு முன்னுரிமை தரலாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். ஒருவருக்கும் பணி பாதிப்பு வராது.

பழனிசாமி: கனமழையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் நேரில்பார்வையிட்டு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். பல இடங்களில் பயிர் முழுமையாக வளர்ச்சி பெறாமல்,நெற்கதிர்கள் வராமல் இருந்தாதல், அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர்.

பழனிசாமி: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் எப்போது வழங்கப்படும்?

அமைச்சர் அர.சக்கரபாணி: வரும் காலங்களில் முதல்வர் கண்டிப்பாக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவார்.

பழனிசாமி: அனைத்து நகரப் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்: எந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்தாரோ, அந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இத்திட்டம் மூலம் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பழனிசாமி: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

முதல்வர் ஸ்டாலின்: போதைப்பொருள் ஒழிப்பில் இந்த ஆட்சி புதியவரலாற்றை படைத்துள்ளது. இருமுறை கஞ்சா வேட்டை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர்கள், காவல்கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 50,825 பேர் கைது செய்யப்பட்டனர். 11 லட்சத்து 59 ஆயிரத்து 906 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள் தொடர்பாக 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17,250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவும், அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் குட்கா மாமூல் பெற்று, போதைப் பொருட்கள் புழக்கம் புற்றுநோய் போல வளர்ந்தது. அப்போதைய அமைச்சர், டிஜிபி மீது சிபிஐகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதிமுக ஆட்சியில் வளர்ந்தவைக்கு இப்போது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

போதைப் பொருட்களை வேரோடு, வேரடி மண்ணோடு ஒழிப்பதுதான் அரசின் லட்சியம். உங்கள் ஆட்சியில் போதைப் பொருள் குறித்து கவலைப்படாமல் இருந்தீர்கள். நாங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதால் செய்தி வெளியில் வருகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x