Published : 13 Jan 2023 06:53 AM
Last Updated : 13 Jan 2023 06:53 AM
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக மைதானத்தில் 23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி, கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் மத்திய காவல் அமைப்பினர் என 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள அனைத்து வகையான துப்பாக்கி சுடுதல் பிரிவு போட்டிகளில் அசாம் ரைபிள்படை முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் இடத்தையும், மத்திய ரிசர்வ் காவல் படை 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. மாநில அளவில் தமிழ்நாடு காவல் துறை முதல் இடத்தையும், ராஜஸ்தான் காவல்துறை இரண்டாம் இடத்தையும், ஒடிசா காவல் துறை 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. வெற்றி பெற்றவீரர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது: தமிழ்நாடு காவல் துறையில் தற்போதுதான் 10 ஆயிரம் போலீஸாரை தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதனால் 3 மாதங்களில் எல்லா காவல் நிலையங்களிலும் காவலர்கள் முழு அளவில் வந்துவிடுவார்கள்.
அதுமட்டுமின்றி 3,600 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான முதல்கட்ட தேர்வு முடிந்துள்ளது. அதேபோல உதவி ஆய்வாளர்கள் ஆயிரம் பேர்ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அவர்களும் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன்பிறகு தமிழ்நாடு காவல்துறை இளமையான காவல்துறையாக தென்படும். தற்போது 81 டிஎஸ்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனிகாவல் நிலையங்களுக்கு சென்றால் இளைஞர்கள் அதுவும் பட்டதாரி இளைஞர்களாக காட்சி அளிக்கும். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
கோயம்பேட்டில் லாரியிலிருந்து விழுந்து உயிரிழந்த அஜித்ரசிகர் விவகாரம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘பாதுகாப்பு இல்லாத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. வாகனத்தின் மீது ஏறுவது, கட்-அவுட்கள் மீது ஏறுவது ஆபத்தானது. எனவே, உயிருக்கு ஆபத்து தரும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. தற்போது உயிரிழந்துள்ள இளைஞரின் குடும்பமே சிரமத்துக்கு உள்ளாகி உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT