Published : 06 Jul 2014 11:24 AM
Last Updated : 06 Jul 2014 11:24 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்த, சென்னை மாநகரக் காவல் ஆணையரின் ஒட்டுமொத்த மேற்பார்வையில், காவல் இணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 28.6.2014 அன்று மாலை தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

எனது உத்தரவின் பேரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியிலும்; காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியிலும்; சென்னை மாநகரக் காவல்

துறை, அதிரடிப் படை, மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு, மருத்துவத் துறை, நெடுஞ்சாலைகள் துறை, பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி, நகராட்சிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த விபத்தில் மொத்தம் 88 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 27 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 61 நபர்கள் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் ஆறு நாட்களாக நடைபெற்ற இந்தப் பணி 4.7.2014 அன்று முடிவுக்கு வந்தது.

தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து, மாங்காடு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள ஏதுவாக, காவல் இணை ஆணையர் மேற்பார்வையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், இயக்குநர், கட்டடக் கலைஞர், கட்டமைப்புப் பொறியாளர் மற்றும் இரண்டு மனைப் பொறியாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள பொறியியல் மற்றும் கட்டடக் கலை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவைப்படுவதால், சென்னை மாநகரக் காவல் ஆணையரின் ஒட்டுமொத்த மேற்பார்வையில், காவல் இணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் குழுவில், புலனாய்வினை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் ஏதுவாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுப் பணித் துறையைச் சார்ந்த வல்லுநர்களும் இடம் பெறுவார்கள்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x