Published : 13 Jan 2023 04:13 AM
Last Updated : 13 Jan 2023 04:13 AM

திண்டுக்கல்லில் 22 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி - திருவள்ளுவர் சிலை அமைக்க அரசாணை வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆண்டுகள் முயற்சிக்கு பின்பு திருவள்ளுவர் சிலையை அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்க திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் 1999-ம் ஆண்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் நிதி உதவியுடன் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் மூலம் 500 கிலோ எடை கொண்ட வெண்கல வார்ப்பு சிலை ரூ.2 லட்சம் செலவில் செய்யப்பட்டது.

2000-ம் ஆண்டில் அந்த சிலையை திண்டுக்கல்லில் பொது இடத்தில் நிறுவ முயன்றபோது அனுமதி அளிக்கப்படவில்லை. நீண்ட காத்தி ருப்புக்கு பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் பள்ளி முன் திருவள்ளுவர் சிலையை வைக்க பள்ளி நிர்வாகம் அனுமதித்தது.

பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி சிலையை அமைக்க பீடம் கட்டப்பட்டது. அங்கு சிலையை நிறுவ முயற்சித்தபோது, அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறி, அத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் இலக்கியப் பேரவை அமைப்பினர் சிலையை அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இது பற்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், சிலை வைக்க அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் செயலாளர் கணேசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாரயண பிரசாத் அமர்வு, திண்டுக்கல் ஆட்சியரின் பரிந்துரை அடிப்படையில் திருவள்ளுவர் சிலை அமைக்க 3 வாரங்களில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சிலை வைக்க அனுமதி அளிக்கும்படி சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். தற்போது இச்சிலையை அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் ச.விசாகன் கூறுகையில், அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டுவிட்டது. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்க உள்ளது என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x