Published : 13 Jan 2023 12:55 AM
Last Updated : 13 Jan 2023 12:55 AM

"பகுத்தறிவாக உங்களது அறிவு வளர வேண்டும்" - கலை திருவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு அரசினுடைய பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட கலை திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வெற்றிவாகை சூடிய ஒவ்வொரு மாணவ, மாணவியர்க்கும் என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் பெற்றுள்ள வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. பல்லாயிரக்கணக்கானவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்த வெற்றிக்கு உங்களுடைய துணிச்சலும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் அடிப்படை காரணம். இதை வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

நாளைய தமிழ்நாட்டைக் காக்கும் இலட்சியவாதிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள். ஆக, அதற்காக நீங்கள் அடைந்திருக்கக்கூடிய இந்த வெற்றியை முதற்கட்ட வெற்றியாக இதனை நீங்கள் கருதிட வேண்டும். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இந்த கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி இத்துறையானது பல்வேறு வகைகளிலும் மாணவர்களின் அறிவுத்திறனையும், கலைத்திறனையும் ஊக்கப்படுத்தி வருகிறது.

பாடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி, கற்பித்தல் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்தி வருகிறது. நமது மரபார்ந்த கலைகளை மாணவர்கள் நெஞ்சில் விதைப்பதை நான் பாராட்டுகிறேன். பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் தன்னம்பிக்கை பெறுவார்கள்.

6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவியருக்கு கலைப் பயிற்சி அளிக்கவும் கல்வியில் கலைகளை கொணரும் வகையில், கால அட்டவணை உருவாக்கி கலை அரங்கமாக செயல்படுத்தி வருகிறது. கலையில் ஆர்வமுள்ள ஒரு ஆசிரியரால் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அளவில் கருத்தாளர்களின் பங்கெடுப்புடன் அனைத்துக் கலை வடிவங்களுக்கும் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில், இந்தத் திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில்தான் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் நீங்கள் பங்கெடுத்து பரிசுகளைப் பெற்றுள்ளீர்கள்.

கலையரசன், கலையரசி பட்டமும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதல் 20 இடங்களைப் பெறக்கூடிய மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்கிறோம். வாழ்வின் கடினமான நேரங்களில் நாம் கற்ற கலைகளை மனதிற்கு மாமருந்து என்பதனை உணர்ந்து, மாணவர்களின் கல்வித்திறன்களை, கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத் திருவிழாவினை உருவாக்கியிருக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ளதுடன் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடிக் கல்வி, எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’, பள்ளி மேலாண்மைக் குழுக்கள், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே புது எழுச்சியை உருவாக்கியுள்ளது. இப்படி ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். உங்களது அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x