Published : 12 Jan 2023 10:35 PM
Last Updated : 12 Jan 2023 10:35 PM

‘‘மரபுகளை மீறாமல் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுறுத்துங்கள்’’ - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து விளக்கினர்.

தற்போது இதே சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வான ஒன்று, அதனை நாம் அனைவரும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். அதே சமயம், ஆளுநர் என்பவர் அரசியல் கருத்துகளுக்கு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறானதாக உள்ளது. தமிழ் மக்கள், எங்களின் தனிப்பட்ட பண்பாடு, இலக்கியம், சமநோக்கான அரசியல் போன்ற அனைத்தின் மீதும் ஒரு கடும் எதிர் மனப்பாங்கினைக் கொண்டவராக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

இம்மாநிலத்தில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது. மேலும், பொதுமேடைகளில் அவர் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே சட்டமன்றத்தின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது.

ஆளுநர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1)-ன்படி ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆளுநர் உரை அந்தந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சட்டமன்றத்தில் தயாரித்துக் கொடுத்ததாகத்தான் எப்போதும் இருந்து வருகிறது. ஆளுநர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்துகளுக்கேற்ப அந்த உரையிலுள்ள கருத்துக்களை மாற்றவோ, புதிய கருத்துக்களை சேர்க்கவோ கூடாது. ஆனால், திங்களன்று ஆளுநர் அரசியல் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி அரசால் தயாரிக்கப்பட்டு அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையின் பல பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார்.

இப்படிச் செய்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனங்களுக்கு நெருக்கமான கொள்கைகளை, சமூக அமைப்பினை அவர் கேள்விக்குறியாக்கி இருக்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம். மாநிலத்தின் மிக முக்கிய, அரசியமைப்பின் உயரிய பொறுப்பிலுள்ள ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வதும், மதம் மற்றும் மொழி சார்ந்த சார்ப்பு நிலைகள் எடுப்பதும், மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் நடத்துகொள்வதும் மாநில சமூக கட்டமைப்புகளை சிதைப்பதும் மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும். இதன் காரணமாகத்தான் முறையற்ற வகையில் ஆளுநர் வாசித்த உரையை, ஏற்கெனவே அவரால் ஒப்புதல் அளித்து சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டதை மாற்றாமல் ஏற்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் மக்களாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பினைக் காக்கவும் வேண்டும். மேலும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் முக்கியமான அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவைகளை முட்டுக்கட்டைபோட்டு வருவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட மசோதக்களை தேவையற்ற சிறு காரணங்களைக் காட்டி சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பது அரசின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் பணிகளையும் தன் கையில் எடுத்துக்கொண்டது போலாகின்றது.

தமிழ்நாடு என்பது எல்லா மாநிலத்தவரையும், எல்லா நாட்டினைரையும் அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்புக்குப் பெயர் பெற்றது. இங்கு பல்வேறு மத, மொழி மற்றும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையோடு பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்தக் கொள்கைகளுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி மாநிலத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய ஒரு சூழலை ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார். எனவே, குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், இரண்டாவதாக, ஆளுநர் என்பவர் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்புநிலையை பொதுவெளியில் எடுத்துக்கொண்டு, பல்லாண்டு காலமாக பின்பற்றப்பட்டுவரும் நமது மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்துங்கள்.

குடியரசுத் தலைவருக்கு எழுதப்படும் இந்தக் கடிதமானது மாநிலத்தில் ஒரு இணக்கமான, சுமூகமான உறவு, மக்களாட்சியின் முக்கியமான அமைப்புகளிடையே நிலவ வேண்டுமென்பதற்காவும், அவர்கள் தங்கள் கடமையினை சரிவர செய்யவேண்டும் என்பதற்காகவும் தான் எழுதப்படுகிறது. குடியரசுத் தலைவர் எடுக்கும் முயற்சி இதில் நல்லதொரு பலனைத் தருமென நான் உறுதியாக நம்புகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x