உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப்படம்

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

மதுரை: கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த பாலசுந்தரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோயில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோயிலில் தைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. கடந்த சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை என்பவர் முதல் மரியாதை, சிறப்பு மரியாதை கேட்டு வருகிறார்.

பல்வேறு சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழாவில் அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு கோயில் பூசாரிகளை வற்புறுத்தி வருகிறார். எனவே சிங்கம்புணரி மல்லாகோட்டை கிராமத்தில் நடைபெறும் தைப் பொங்கல் விழாவில் யாருக்கும் முதல் மரியாதையும் சிறப்பு மரியாதை வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிது அல்ல. கடந்த ஆண்டும் இதேபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கோயிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். கோவிலுக்குள் அனைவரும் சமமானவர்களே என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும். இந்த வழக்கிலும் தங்களது அந்தஸ்தை சிறப்பாக காட்டிக்கொள்ளும் வகையிலான அடையாளங்கள் இருக்கக் கூடாது. சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. விழாவை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in