Published : 04 Jul 2014 09:00 AM
Last Updated : 04 Jul 2014 09:00 AM
பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான புதிய திட்டத்தை உருவாக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மரியா லூயிஸ், ராணுவத்தில் பணி யாற்றினார். பணியில் இருக்கும் போது கடந்த 2004-ம் ஆண்டு அவர் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி, மகள் மற்றும் வயதான பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். தனக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு தரக் கோரி சேலம் ஆட்சியருக்கு ராணுவ வீரரின் மனைவி மேரி மெடில்டா கோரிக்கை மனு அனுப்பினார். அவருக்கு வருவாய் உதவியாளராக பணி வழங்கும்படி கூறி, அவரது மனுவை மேட்டூர் நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் அனுப்பினார்.
எனினும் பணியில் இருக்கும் ராணுவ வீரர் உயிரிழந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதால், மேரி மெடில்டா வுக்கு வேலை தர இயலாது என மேட்டூர் நகராட்சி ஆணையர் கூறி விட்டார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேரி மெடில்டா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு கடந்த மாதம் 2 மற்றும் 9-ம் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தரும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா என்பது பற்றி மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும் அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த மனு கடந்த 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த நாட்டு மக்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்கு, எல்லை களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் தன்னலமற்ற பெரும் சேவைதான் காரணம். அத்தகைய பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசுதான் இதை செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க இயலாது. ராணுவ வீரர்களின் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்கான அக்கறை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
ஆகவே, பணியிலிருக்கும் மாநில அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசு களுக்கு கருணை அடிப்படை யில் வேலைவாய்ப்பு வழங்கப்படு வதுபோல, பணியிலிருக்கும்போது உயிர் துறக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஆகவே, மனுதாரரின் குடும்ப சூழலைப் பரிசீலித்து, கருணை அடிப்படையில் அவருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறதா என்பதை அரசு ஆராய வேண்டும். அப்படி தேவைப்பட்டால் 4 மாதங்களுக்குள் மனுதாரருக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் இருந்து ராணுவப் பணிக்குச் சென்று, பணியி லிருக்கும்போது உயிரிழக்கும் வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒரு திட்டத்தை உருவாக்கலாம் என அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இவ்வாறு நீதிபதி நாகமுத்து தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT