Published : 12 Jan 2023 04:21 PM
Last Updated : 12 Jan 2023 04:21 PM
சென்னை: திருப்பூரில் நடைபெற இருக்கும் எஸ்டிபிஐ ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்,இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்தாண்டு மத்திய அரசு பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 வருட காலம் தடை செய்து உத்தரவிட்டது. மத்திய அரசால் ஐந்தாண்டு காலம் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா இந்தியாவின் நிறுவனரான அபூபக்கர் என்பவர் தான் எஸ்டிபிஐ அமைப்புக்கும் நிறுவனராக இருந்து வருகிறார்.
பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சரோஸ் கான், சையத் இப்ராஹிம், ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் , போக்குவரத்து நெரிசலான இடமான யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா அருகில் வரும் 22-ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் இஸ்லாமிய தலைவர்கள் விரும்பத்தகாத வகையில் பேசக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் மட்டுமின்றி, இரு மதத்தினருக்கு இடையே வெறுப்புணர்வை அந்த பேச்சுகள் ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி கடந்த 3-ம் தேதி எஸ்டிபிஐ சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவை திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர் நிராகரிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT