Published : 12 Jan 2023 04:13 PM
Last Updated : 12 Jan 2023 04:13 PM

தரமற்ற உணவு மாதிரிகள் - தமிழகத்தில் 21 மாதங்களில் 7806 வழக்குகள் பதிந்து ரூ.8.35 கோடி அபராதம் விதிப்பு

உணவு பகுப்பாய்வாக வாகனம்

சென்னை: கடந்த ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை 7405 தரமற்ற உணவு மாதிரிகள் கண்டறியப்பட்டு, 6542 வழக்குகள் தொடரப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1264 வழக்குகள் தொடரப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.2.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், உணவு பாதுகாப்பு துறையின் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை (ஜன.12) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஏற்கெனவே 6 உணவு பகுப்பாய்வு கூடங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் சென்னை-கிண்டி, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படுகிறது.

கடந்த ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை 34,980, உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 2266 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றதாகவும், 7405 உணவு மாதிரிகள் தரமற்றதாகவும் கண்டறியப்பட்டு, 6542 வழக்குகள் தொடரப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1264 வழக்குகள் தொடரப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.2.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடங்கள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று அறிவித்தற்கிணங்க, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்காக புதியதாக வாங்கப்பட்ட 4 நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் இன்று தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இப்பகுப்பாய்வக வாகனங்களில் 30 வகையான உணவு பொருட்களில் கலப்படங்களை கண்டறியும் வசதிகள் மற்றும் கலப்படம் குறித்த விளக்கப் படங்களும் உள்ளது. மேலும் இவ்வாகனங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செல்லும் வகையில் அட்டவணைப்படி தயாரிக்கப்பட்டுள்ளது. உணவுக் கலப்படம் தொடர்பாக ஏற்கனவே புகார் தெரிவிப்பதற்கென்று 104 என்ற எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், புகைப்படத்துடன் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் (Whatsapp) 9444042322 உள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x