Published : 12 Jan 2023 04:09 PM
Last Updated : 12 Jan 2023 04:09 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் பால் விலை உயர்வு வலி தரக் கூடியதுதான், எனக்கும் வருத்தம்தான்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி ராஜ்நிவாஸில் பொங்கல் விழாவின்போது துணை நிலைஆளுநர் தமிழிசை கூறியதாவது: ''ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடியதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எந்த மாநில வேறுபாடுமின்றி வடமாநில அதிகாரிகள் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் தொடர்பான எக்கேள்விகளுக்கும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. புதுவையில் பால் விலை உயர்வு வலி தரக் கூடியதுதான். இதில் எனக்கும் வருத்தம்தான். நிர்வாகம் விலை உயர்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊக்கப்படுத்தியுள்ளோம்.
வேறு மாநிலத்தில் பால் வாங்கப்படுகிறது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தியில் புதுவை தன்னிறைவு பெற வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகளவு பால் வந்த பின் விலை ஏற்றக்கூடாது என்பதே எண்ணம். பொங்கலுக்கு பொருட்களுக்கு பதிலாக நேரடி பணபரிமாற்றம் முறையில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வழங்கியதால் மக்கள் இஷ்டப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். பொங்கலுக்கு மகிழ்ச்சியை நேரடி பண பரிமாற்றம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளோம்.
ரேஷன் கடை திறப்பு தொடர்பாக எந்த கோப்பும் என்னிடம் நிலுவையில் இல்லை. ரேஷன்கடைகள் திறப்பு உட்பட சில முடிவுகளுக்கு கொள்கைரீதியில் முடிவெடுக்கப்பட வேண்டும். பல ஆண்டாக இது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரேஷன் கடை திறப்பு பற்றி தற்போது கூற இயலாது. மின்கட்டண உயர்வு என இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உட்பட சில முடிவுகளை, சில நிறுவனங்கள் எடுக்கிறது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என முதல்வர் உதவிகளை அறிவிக்கிறார்.
தற்போது அரசின் எந்த உதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பான கோப்புக்கு ஆளுநராக ஒப்புதல் தந்துள்ளேன். முதல்வர் அறிவிப்பதற்கு மக்கள் நலன் கருதி நான் ஒப்புதல் தருகிறேன். ஹாலோகிராம் மோசடியில் ஈடுபட்ட மதுபான ஆலையில் பெண்கள் உட்பட பலர் பணிபுரிகிறார்கள் என கோரிக்கை வந்தது. இதனால் கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு ஆலை திறக்க அனுமதித்துள்ளோம். அரசு நஷ்டமடையும் வகையில் எதுவும் நடைபெறவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT