Published : 12 Jan 2023 03:46 PM
Last Updated : 12 Jan 2023 03:46 PM
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நாளை (ஜன.13) சமரசக் கூட்டம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அவனியாபுரத்தில் தை முதல் நாளான ஜன. 15-ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 2022-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகத்தினரும் உள்ளடங்கிய குழுவால் நடத்தப்பட்டது.இந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமூகத்தினர் உள்ளடங்கிய குழு அமைக்காமல், குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழுவை கொண்டு நடத்த முயற்சி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவில் பட்டியல் சமூகத்தினர் புறக்கணிப்பட்டுள்ளனர். இதனால் 2022-ல் நடைபெற்ற போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை உயர் நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து சமூகத்தினர் இணைந்த குழு அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர். விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், செலவுகளையும் அரசு செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு பல சமூகத்தினர், அமைப்பினர் குழு அமைக்கின்றனர்” என்றார்.
மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவுபடி 2022-ல் அதிகாரிகள், அனைத்து சமூகத்தினர் உள்ளடங்கிய ஆலோசனைக்குழு, ஒருங்கிணைப்பு குழு அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்தாண்டும் அதேபோல் குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்” என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், “ஆலோசனைக்குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் பணி என்ன?” என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர்கள் தரப்பில், “அனைத்து சமூகத்தினர் உள்ளடங்கிய ஆலோசனைக் குழு, காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழா நடத்தும் பணியை மேற்கொள்ளும்” என்றனர்.
அரசு வழக்கறிஞர், “இந்த ஆண்டு ஆலோசனைக் குழு அமைக்கப்படவில்லை” என்றார். இதையடுத்து நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் நாளை சமரசக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூகத்தினர் உள்ளடங்கிய ஆலோசனைக்குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தலாம்.
தீர்வு ஏற்படாவிட்டால் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், அனைத்து சமூகத்தினர் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தும்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT