Published : 12 Jan 2023 03:29 PM
Last Updated : 12 Jan 2023 03:29 PM
சென்னை: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று (ஜன.12) விலகியது.
12 மற்றும் 13ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 14-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT