Published : 12 Jan 2023 04:09 AM
Last Updated : 12 Jan 2023 04:09 AM
ஆண்டிபட்டி: சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவாரம்பூ ஆண்டிபட்டி பகுதிகளில் அதிகளவில் பூத்துள்ளன. சர்க்கரை நோய் மருந்து தயாரிப்பதற்காக பலரும் இவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து எம்.சுப்புலாபுரம், ஆசாரிபட்டி, அம்மச்சியாபுரம், பிராதுகாரன்பட்டி, க.விலக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மூலிகைச்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. குறிப்பாக ஆவாரம் பூவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தப் பூ சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை குணப்படுத்த அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக இப்பகுதி கூலித் தொழிலாளர்கள் பலரும் இதனை சேகரித்து மருந்தகத்திற்கு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த எத்திலு என்ற தொழிலாளி கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவற்றை சேகரித்து வருகிறேன். கிலோ ரூ.50க்கு விலை போகும். தினமும் 10 கிலோ வரை பூ எடுக்கலாம். இவற்றை நிழலில் உலர வைத்து வியாபாரிகளிடம் விற்பனை செய்வோம்" என்றார்.
சித்த மருத்துவர்கள் சிலர் கூறுகையில், "ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று குறிப்பிடும் அளவிற்கு இந்த பூ சித்த மருத்துவத்தில் சிறப்பு பெற்றது. சர்க்கரை ரத்தத்தில் தேங்காமல் அவற்றை செல்லுக்குள் அனுப்புவதற்கான நொதியை தூண்டிவிடும் ஆற்றல் இந்த ஆவாரம்பூவுக்கு உண்டு. இவற்றை கசாயம், பால் கலக்காத தேநீர், பவுடர் மற்றும் ஆவாரைக் குடிநீராகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் சர்க்கரையின் அளவு வெகுவாய் கட்டுப்படும். இதுமட்டுமல்லாது மூட்டுவலி, அதிக தாகம், நரம்புத்தளர்ச்சி போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பூ என்பதால்தான் பொங்கலுக்கு காப்பு கட்டும்போது இப்பூவையும் சேர்த்துக் கொள்கிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT