Published : 12 Jan 2023 04:25 AM
Last Updated : 12 Jan 2023 04:25 AM
மதுரை: மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் படுகாயம் அடைவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 7 சிறப்பு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினருடன் தற்காலிக சிறப்பு மருத்துவமனைகள் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் அருகே அமைக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு, 17-ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் முட்டி காளை உரிமையாளர், பார்வையாளர், மாடுபிடி வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஊனம் அடைந்துள்ளனர்.
அவர்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலேயே தற்காலிக முகாம்களில் கிடைத்தாலும், சிறப்பு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ்களில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இடைப்பட்ட நேரத்தில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. அதனால் நடப்பாண்டில் வாடிவாசல் அருகேயே தற்காலிக சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் ஆண்டுதோறும் முதலுதவி சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினர், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு பணியாக பணிபுரிவார்கள். அவர்கள் காயமடைந்தோருக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் வழங்கி, மேல் சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்புவர்.
இந்த ஆண்டு போட்டிகளில் காயமடைவோருக்கு முடிந்தளவு உடனடியாக சிறப்பு சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகேயே தற்காலிக சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக பொது சிறப்பு மருத்துவர், சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர், சிறப்பு எலும்பியல் நிபுணர்,
இதய சிகிச்சை நிபுணர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் தலைமையில், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினரை நியமிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜல்லிக்கட்டில் காயமடையும் வீரர்களுக்கு தற்காலிக மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு, அதன்பிறகே அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர் என்றனர்.
முதல்வர் வருவாரா?: ஜல்லிக்கட்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வருமாறு முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்க முடிவு செய்துள்ளோம். அவர்களை சந்திப்பதற்காக காத்திருக்கிறோம். முதல்வர் தரப்பில் உறுதி தரப்படவில்லை.
அவர் வராதபட்சத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உறுதியாக வருவார். பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளூர் அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT