Published : 20 Dec 2016 08:48 AM
Last Updated : 20 Dec 2016 08:48 AM
கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலி அருகே உள்ள பேரூரில் ரூ.5 ஆயிரம் கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் ‘மெகா’ திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் தினமும் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
சென்னைக் குடிநீர் தேவைக் காக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப் பள்ளியில் தினமும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதுபோல காஞ்சீபுரம் மாவட் டம், நெமிலியில் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் தலா ரூ.570 கோடியில் முடிக்கப்பட்டன.
இந்த வரிசையில் நெமிலியில் தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆயிரத்து 250 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு கே.எப்.டபிள்யூ என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனம் நிதியுதவி செய்கிறது. இத்திட்டப் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில், நெமிலி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரூர் என்ற இடத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் ‘மெகா திட்டம்’ ஒன்றைத் தொடங்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலி அருகே பேரூர் என்ற இடத்தில் இந்த மெகா திட்டம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான 60 ஏக்கர் நிலம் ஆளவந்தார் அறக்கட்டளையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு தேவையான கணிசமான நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை வழங்குகிறது.
மத்திய சென்னை, தென் சென்னையை உள்ளடக்கிய பழைய சென்னைக்கு குடிநீர் விநி யோகம் செய்வதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. பேரூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் உற்பத்தி செய்யப்படும் 400 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு எடுத்து வருவதற்காக பேரூரில் இருந்து போரூர் வரை 65 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெகா குழாய்’ பதிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கான டென்டர்விட்டு விரைவில் பணி களைத் தொடங்க சென்னை குடிநீர் வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT