Last Updated : 11 Jan, 2023 08:29 PM

 

Published : 11 Jan 2023 08:29 PM
Last Updated : 11 Jan 2023 08:29 PM

குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

மதுரை: தமிழகத்தில் குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் திருவிழாக்களில் குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் ஆபாச நடனம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை குறவன்- குறத்தி ஆட்டம் என பெயரிட்டு சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இதனால் குறவர் இனத்தினரை தவறாக நினைக்கும் சூழல் உள்ளது.

தமிழகத்தில் குறவர் பழங்குடியின சமூக மக்கள் 20 லட்சத்திற்கும் மேல் வாழ்கின்றனர். இவர்கள் நன்றாக கல்வி பயின்று அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ளனர். இந்த நேரத்தில் குறவன்- குறத்தி ஆட்டங்கள் மூலம் குறவர் சமூகம் இழிவுபடுத்தப்படுகிறது. தீண்டாமை கொடுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறோம்.

இணையதளத்தில் உள்ள குறவன் - குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்கவும், ஆபாச நடனங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகமும் குறிப்பாக பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தப்படும் விதமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது, ஆடல் பாடல் நிகழ்ச்சி குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் பிரிவில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தடுக்கவும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x