Published : 11 Jan 2023 07:09 PM
Last Updated : 11 Jan 2023 07:09 PM
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில், வன்முறையை தூண்டும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சத்யசீலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜன.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டுவந்த அண்ணல் அம்பேத்கரின் பெயரைக் கூட உச்சரிக்க ஆளுநர் மறுத்தது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே ஆளுநரைக் கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளுநர் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டு வகையிலும் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பொது மக்களிடையே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதுபோன்ற ஆளுநரின் நடவடிக்கைக்களை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
ஆளுநர் பாஜகவின் ஊதுகோலாக செயல்படுகிறார். ஆளுநர் என்பவர் பொது மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டுமே தவிர ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது .
பொது நலன் கருதி மட்டுமே ஆளுநரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலின்போது முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தலின்போது சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT