Last Updated : 11 Jan, 2023 06:14 PM

 

Published : 11 Jan 2023 06:14 PM
Last Updated : 11 Jan 2023 06:14 PM

கஞ்சா, போதைப் பொருட்களை தடுக்க கடும் நடவடிக்கை: மதுரை புதிய காவல் ஆணையர் உறுதி

மதுரையின் புதிய காவல் ஆணையர் கே.எஸ்.நரேந்திரன் நாயர்

மதுரை: தூங்கா நகரமான மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய காவல் ஆணையர் கே.எஸ்.நரேந்திரன் நாயர் கூறினார்.

மதுரை மாநகர காவல்துறை ஆணையராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய காவல் ஆணையராக கே.எஸ்.நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.இ. பட்டதாரியான இவர், கடந்த 2005-ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். ஈரோடு மாவட்டம், பவானி, வந்தவாசி, சிதம்பரத்தில் உதவி எஸ்.பி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடியில் எஸ்.பியாக பணிபுரிந்தார்.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் தனி பாதுகாப்பு அதிகாரி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் இமிக்கிரேஷன் பிரிவில் துணை இயக்குநர், தென்சென்னை இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தினமும் காவல் துறையினரின் பணியை முழுமையாக செயல்படுத்துவேன். கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சித்திரைத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்வுகளில் மக்கள் எவ்வித அச்சம், இடையூறு இன்றி பங்கேற்க நடவடிக்கை எடுப்போம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம். தூங்கா நகரம், கலாச்சாரம் மிகுந்த நகரம். சட்டம், ஒழுங்கு, குற்றச் சம்பவங்களை தடுக்கப்படும். ஏற்கெனவே தென் சென்னையில் இணை ஆணையராக பணிபுரிந்து இருக்கிறேன். அதன் பரப்பளவு கொண்ட மதுரையிலும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இருப்பேன். எனக்கு முன்னால் பணிபுரிந்த ஆணையர்கள் செயல்படுத்திய பணிகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவேன்'' என்றார். துணை ஆணையர்கள் ஆறுமுகசாமி, வனிதா, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x