Published : 11 Jan 2023 05:52 PM
Last Updated : 11 Jan 2023 05:52 PM
சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை நகரில் போக்குவரத்தை சரிசெய்வதற்கு நவீன சென்சார் அடிப்படையிலான கருவிகளை பொருத்துவது தொடர்பான டெண்டரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நதியழகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியுதவி மூலம் சென்னை நகரில் போக்குவரத்தை சரி செய்யவும் வாகனங்களின் நெருக்கத்தின் அடிப்படையில் சிக்னல்கள் இயங்கும் வகையிலான சென்சார் அடிப்படையிலான கருவிகளை பொருத்துவது தொடர்பாக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் படிவங்களைப் பெற 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 10 கோடி ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளால் பல ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் காரணமாக இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் படிவங்களை சமர்ப்பித்த நிலையில், ஒரு நிறுவனம், கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முதலில் 650 கோடி ரூபாய்க்கு திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. பிறகு இத்தொகையை 904 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. பின்னர் 436 கோடி ரூபாய்க்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த டெண்டரை ரத்து செய்து புதிதாக டெண்டர் கோர உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் தொகையை 904 கோடி ரூபாயாக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT