Published : 11 Jan 2023 05:10 PM
Last Updated : 11 Jan 2023 05:10 PM
சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மேலும் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 40-ஐ கடந்து தொடரும் தற்கொலைகளுக்கு முடிவு எப்போது?” என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''நெல்லை மாவட்ட பனகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த சிவன்ராஜ் என்ற பட்டதாரி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 40-ஆவது தற்கொலை இதுவாகும்.
பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ் பெரும் பணத்தை இழந்த நிலையில், அவரது தந்தை, வீட்டு உடமைகளையும், கால்நடையையும் விற்றுக் கொடுத்த ரூ.1 லட்சத்தையும் சூதாடி இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்குகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
சிவன்ராஜை போன்று ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த உண்மைகளை அறிந்தும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் இனியும் தொடரக் கூடாது. எனவே, தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் 162-ஆவது பிரிவை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT