Published : 11 Jan 2023 03:31 PM
Last Updated : 11 Jan 2023 03:31 PM
சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, முந்தைய அதிமுக ஆட்சியில் தேர்வு ஏதும் நடத்தப்படாமல், 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால் வள துணைப் பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட கே.பவ்னீத் சூர்யா, எம்.ராஜசேகர், டி.ஏழுமலை உள்ளிட்ட 25 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், "அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் நீடிக்கும் நிலையில், எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்ய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, எந்த அதிகாரமும் இல்லாத, ஒன்றியத்தின் பொது மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த பணி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் நாங்கள் பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வெங்கட்ரமணி, "எந்த நோட்டீஸும் கொடுக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு" என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "வழக்குத் தொடர்ந்திருந்த 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT