Published : 11 Jan 2023 04:57 AM
Last Updated : 11 Jan 2023 04:57 AM
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான திமுக எம்பி. ஆ.ராசா உள்ளிட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, டெல்லி, சென்னை, கோவை,திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை அடிப்படையில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஸ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய்சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு ஆ.ராசா சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி டி.சிவக்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் லெனின்ராஜா ஆஜரானார். நேற்றைய விசாரணையின்போது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை பிப்.8-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT