Published : 11 Jan 2023 06:25 AM
Last Updated : 11 Jan 2023 06:25 AM
சென்னை: கோயில் பணியாளர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வுடன், பொங்கல் கருணைக் கொடையாக (போனஸ்) ரூ.3,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோயில்கள் மேம்பாடு, கோயில் சொத்துகள் பாதுகாப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் நிறைவேற்றம், பணியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டது. கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ரூ.3,000 ஓய்வூதியம் ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டது.
கோயிலில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்கான கட்டணத்திலும் விலக்கு அளிக்கப்பட்டது. அப்பணியை மேற்கொள்வோருக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயில் அர்ச்சகர்கள், இதர பணியாளர்களுக்கு 2 ஜோடி புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் கோயில்களில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஜன.1 முதல் அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 10 ஆயிரம் கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.7 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
மேலும், பொங்கலை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவதுபோல, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர, தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த ரூ.2,000 பொங்கல் கருணைக் கொடையை (போனஸ்) இந்த ஆண்டில் ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த ஆண்டு ரூ.1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
கோயில் பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு, மகிழ்ச்சியை அளிப்பதுடன், பொங்கல் பண்டிகையை அவர்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாட வழிவகை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT