Published : 11 Jan 2023 04:15 AM
Last Updated : 11 Jan 2023 04:15 AM
கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகைக்கு தேவையிருந்தும், மஞ்சள் கொத்துக்கு உரிய விலை கிடைக்காததால், கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் தான் நினைவுக்கு வரும். பொங்கல் பண்டிகையின்போது, பாரம்பரிய முறைப்படி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் படைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விவசாயிகள் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
5 ஆயிரம் ஏக்கர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக வருவாய் இழப்பு, மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது.
பொங்கல் விற்பனை: இந்நிலையில், கடந்தாண்டு பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, கும்மனூர், தானம்பட்டி, தாசிரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். பொங்கல் பண்டிகை விற்பனையைக் குறி வைத்து நடவு செய்த மஞ்சள் செடிகள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மஞ்சள் செடிகளுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இடைத்தரகர்களுக்கு லாபம்: இது தொடர்பாக காட்டி நாயனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் மற்றும் சிலர் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு 800 கிழங்குகளை நடவு செய்துள்ளோம். 9 மாதங்கள் பராமரிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. மேலும், ஒரு ஏக்கருக்கு கிழங்கு நடவு, பராமரிப்பு உட்பட ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
தற்போது, ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.40 முதல் ரூ.50 வரை விலைக்கு கேட்கின்றனர். இதனால்,எங்களுக்குச் சாகுபடி செலவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்பதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அரசு கொள்முதலுக்கு கோரிக்கை: தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்வதைப்போல, மஞ்சள் கொத்தையும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, ரேஷன் கார்டுதாரருக்கு இலவசமாகக் கொடுக்கலாம். இதன் மூலம் எங்களுக்கு வருவாய் கிடைக்கும். தற்போது விலை கிடைக்காததால், மஞ்சள் கொத்தாக விற்பனை செய்வதை விட கிழங்கை வேக வைத்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT