Published : 10 Jan 2023 10:52 PM
Last Updated : 10 Jan 2023 10:52 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை ஒருநாள் அதிகாலை 1 காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 11 (நாளை) முதல் 17ம் தேதி வரை காலை 5 மணி பிரத்யேக காட்சிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன. இதற்காக நகரெங்கும் பேனர்கள், கட்அவுட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பல திரையரங்குகளிலும் காட்சிகள் இன்று மாலை முதல் ரத்து செய்யப்பட்டு புதிய திரைப்படங்களுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, புதுச்சேரியில் நாளை அதிகாலை ஒரு மணி காட்சிக்கு பல திரையரங்குகள் டிக்கெட் விற்ற சூழலில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. டிக்கெட் விற்பனையானதால் அக்காட்சியை நடத்த அனுமதிக்கேட்டு திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியர் வல்லவனை அணுகினர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிவில் பேசிய புதுச்சேரி ஆட்சியர் வல்லவன், "தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இரு திரைப்படங்கள் வெளியாவதை அடுத்து நாளை அதிகாலை 1 மணி சிறப்பு காட்சிக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் சுமூகமாக ரசிகர்கள் பார்க்க ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் நள்ளிரவு 1 மணி காட்சி விண்ணப்பித்த திரையரங்குகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இது அனைத்து திரையரங்குகளுக்கும் பொருந்தாது. மேலும் அதிகாலை 5 மணி பிரத்யேக காட்சிக்கு விண்ணப்பித்த திரையரங்குகளுக்கு 11ம் தேதி (நாளை) முதல் 17 வரை அனுமதி உண்டு. கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். தற்போது அதிகாலை 1 மணி காட்சிக்கு அனுமதி பெற்றுள்ள திரையரங்குகள் விவரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு, "ரத்னா, சண்முகா, அசோக், ஜீவா, ருக்மணி, திவ்யா, முருகா திரையரங்குகள் அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT