Published : 10 Jan 2023 06:08 PM
Last Updated : 10 Jan 2023 06:08 PM
சென்னை: "2023ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் காப்புறுதிக் கட்டணத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் அலுவலகத்தில், 2023ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் காப்புறுதிக் கட்டணத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் அங்ரூப் சோனத்திடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்திளாளர்களைச் சந்தித்த அவர், "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டம் இன்று இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. இந்திய அளவில் காப்பீட்டு திட்டத்தின் மிகச்சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10.01.2022 அன்று இந்த திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 1 ஆண்டிற்கு மட்டும் 1,39,87,495 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பிரிமியம் தொகையாக ரூ.849 என்கின்ற வகையில் 95% தொகை ரூ.1128 கோடி வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் 11.01.2021 முதல் 10.01.2022 வரை 7,49,227 பயனாளிகள் பயன்பெற்றுள்ளார்கள், அதற்கான பிரீமியம் தொகை ரூ.1227.35 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை பொறுத்தவரை 23.07.2009 முதல் 30.12.2022 வரை 1,23,32,744 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு பயனுள்ள இந்த திட்டத்திற்கு தற்போது இரண்டாவது ஆண்டிற்கான பிரிமியம் தொகை ரூ.1140.75 கோடியும், கடந்த ஆண்டின் மீதமுள்ள 5% பிரீமியம் தொகை ரூ.59.37 கோடியும் சேர்த்து ஆகமொத்தம் ரூ.1200.13 கோடிக்கான காசோலை இன்று யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையின் மூலம் இந்த ஆண்டும் மிகப்பெரிய அளவில் பொது மக்கள் பயன்பெறுவார்கள்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT