Published : 10 Jan 2023 03:25 PM
Last Updated : 10 Jan 2023 03:25 PM

“தமிழ்நாடு அரசின் இலச்சினையைப் புறக்கணித்ததால் ஆளுநராக இங்கிருக்க தகுதியற்றவர் ஆகிறார்” - திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப்படம்

சென்னை: "தமிழ்நாடு அரசு பின்பற்றக்கூடிய இலச்சினை, தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் புறக்கணிக்கிறார், திராவிட அரசியலை விமர்சிக்கிறார் என்றால், அவர் ஆளுநராக இங்கிருப்பதற்கு தகுதியற்றவராகிறார்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "ஆளுநரின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து, அவை மரபு மீறலைக் கண்டித்து உடனடி எதிர்வினை ஆற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது. விரைவாக முடிவெடுத்து முதல்வர் ஆற்றிய எதிர்வினையை விசிக சார்பில் பாராட்டினோம்.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கருத்து முரண் அல்ல அது. இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு மற்றும் அதிகாரங்கள் தொடர்பான ஒரு முரண்பாடு. ஆளுநர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இதை செய்யவில்லை. அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் இந்த செயலை செய்திருக்கிறார்.

அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகுதான், சட்டப்பேரவையில் ஆளுநர் படிப்பதற்கு வைக்கப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அது அச்சுக்கே செல்கிறது. எனவே, ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட அவரது உரையை அதில் உள்ளபடி படிக்காமல், சில பகுதிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்திருக்கிறார். சிலவற்றை தன்னுடைய விருப்பம்போல் இணைத்து வாசித்திருக்கிறார். இது சங்பரிவார்களின் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்றுதான் என்றுதான் உணர முடிகிறது. இதை மீறி எதையும் இணைக்கக்கூடாது, படிக்கக் கூடாது என்பது அவருக்கு தெரியாதது அல்ல. அவருக்கு அவை மரபுகள் என்பது என்னவென்று தெரியும்.

அரசமைப்பு சட்டம் தெரிந்தவர் இவ்வாறு செய்வது உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செய்த ஒன்று. எனவே, இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எதிர்வினையாற்றி முதல்வரின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், வரும் 11-ம் தேதி மாலை, 3 மணியளவில் சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம், அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் இடம்பெற்று இந்திய அரசின் இலச்சினைகள் பயன்படுத்தியிருந்தது குறித்து கேட்கப்பட்டதற்கு, "ஆளுநர் தமிழகம் என்றோ, தமிழ்நாடு என்றோ அழைக்கட்டும். அது பிரச்சினை இல்லை. ஆனால், தமிழ்நாடு இலச்சினையைப் புறக்கணித்தார் என்றால், வேண்டுமென்றே அவர் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசை ஆத்திரமூட்டலுக்கு இலக்காக்குகிறார் என்று தெரிகிறது. இது வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கக் கூடிய ஒரு செயலாக தெரிகிறது. இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசு பின்பற்றக்கூடிய இலச்சினை, தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் புறக்கணிக்கிறார், திராவிட அரசியலை விமர்சிக்கிறார் என்றால், அவர் ஆளுநராக இங்கிருப்பதற்கு தகுதியற்றவராகிறார்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக அரசு என்று பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல, தமிழ்நாடு அரசின் இலச்சினைக்குப் பதிலாக இந்திய அரசின் இலச்சினைப் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x