Published : 10 Jan 2023 04:01 AM
Last Updated : 10 Jan 2023 04:01 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது உரையின் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி, தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று காலை பேரவைக் கூட்ட அரங்கில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.58 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். அவரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், காவல் துறை மற்றும் வாத்தியக் குழுவின் மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பேரவை அரங்கில் நுழைந்த ஆளுநர் 10.01-க்கு உரையை வாசிக்கத் தொடங்கினார். முதலில், தான் தமிழில் தயாரித்து வைத்திருந்த சில பகுதிகளைப் படித்தார். பின்னர், அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையை வாசிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதுடன், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல, பாமக உறுப்பினர்களும் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் பாமக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குத் திரும்பினர்.
எனினும், ஆளுநர் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து வாசித்தார். காகிதமில்லா சட்டப்பேரவை செயல்பாடுகள் அமலில் இருப்பதால், ஆளுநர் உரை யாருக்கும் அச்சிட்டு வழங்கப்படவில்லை. முதல்வர் மற்றும் முன்வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தனியாக ‘கையடக்க கணினி’ வழங்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு அவர்களது மேஜையில் பொருத்தப்பட்டிருந்த கணினியில் ஆளுநர் உரை ஒளிபரப்பானது.
ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்தார். அதேபோல, இறுதியில் சில பகுதிகளை வாசிப்பதையும் தவிர்த்து, உரையை முடித்தார். காலை 10.48 மணிக்கு ஆளுநர் உரையை முடித்ததும், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். அப்போது விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவைக்குத் திரும்பினர். பேரவைத் தலைவர் காலை 11.31 மணிக்கு தமிழாக்கத்தை வாசித்து முடித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தீர்மானம் ஒன்றை வாசித்தார்.
அப்போது முதல்வர் பேசியதாவது: தமிழக அரசால் ஆளுநருக்கு வரைவு உரை ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்கப்பட்டு, பின்னர் அச்சடிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்டப் பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.
நமது `திராவிட மாடல்' கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள், ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும், சட்டப்பேரவை விதிகளை நாங்கள் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்கும் முன்னதாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடும், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையிலும் நடந்து கொண்டோம்.
ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமின்றி, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழக அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாகவும், முழுமையாகவும் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, பேரவை மரபுகளை மீறியதும் ஆகும்.
எனவே, சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி, இன்று அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்டப் பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்து முடித்தபோது, முதல்வர் பேசியது குறித்து தனது செயலரிடம் ஆளுநர் விசாரித்து தெரிந்து கொண்டார். இந்நிலையில், அந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் நிறைவேற்ற எழுந்தபோது, திடீரென பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
அவருடன், ஆளுநரின் செயலரும் வெளியேறினார். ஆளுநருக்கு முன்னதாகவே, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட் டது. பின்னர், தேசியகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, அவையின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
தேசியகீதம் இசைக்கப்படும் முன்னரே ஆளுநர் பேரவையில் இருந்து வேகமாக வெளியேறியதும், முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் வெளியேறியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், பேரவைக் கூட்டத்தை வரும் 13-ம் தேதி வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT