Published : 10 Jan 2023 06:17 AM
Last Updated : 10 Jan 2023 06:17 AM

ஆளுநர் உரை மக்களுக்கு ஏமாற்றமே: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. படம்: ம.பிரபு

சென்னை: ஆளுநர் உரையில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே ஆளுநர் கிளம்பிச் செல்லும்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களும் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: ஆளுநர் உரை என்பது, ஒவ்வொரு ஆண்டும், அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களையும், கொள்கைகளையும் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கும் முறை. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில் புதிய, பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை.

இந்த அரசும், முதல்வரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்வதாக பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், இன்றைய தினம் சற்று வித்தியாசமாக ஆளுநர் உரை மூலம் தங்கள் முதுகை தட்டி தற்புகழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதைத்தான் பார்க்க முடிகிறது. இந்த ஆளுநர் உரையில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையில் சில வாக்கியங்களையும், சொற்களையும் படிக்காமல் விட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை ஒப்புதலுக்காக, ஆளுநருக்கு அனுப்பப்படும். அதில் எது இடம்பெற்றது. அதில் உள்ள வரிகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாரா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது” என்று பழனிசாமி கூறினார்.

முதல்வர் பேசுவது மரபா? - முதல்வர் தீர்மானம் கொண்டுவந்து பேசியது தொடர்பாக கேட்டதற்கு, “நாங்கள் ஆளுநர் உரையைத் தான் கேட்க வந்திருக்கிறோம். முதல்வர் உரையை கேட்க வரவில்லை. ஆளுநரை அமர வைத்துக்கொண்டு ஒரு முதல்வர் பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது” என்றார்.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு: மேலும், ‘அமைதிப் பூங்காவாக தமிழகம்’ என்ற சொற்களையும் ஆளுநர் தவிர்த்தது குறித்து கேட்டதற்கு, “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவை நடைபெற்று வருகின்றன. போதைப் பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது. ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட சீர்குலைவான ஆட்சியாகத்தான் இந்த ஆட்சியைப் பார்க்கிறேன்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x