Published : 10 Jan 2023 04:00 AM
Last Updated : 10 Jan 2023 04:00 AM

கோவை | கூலி தொழிலாளி வீட்டின் மின் கட்டணம் ரூ.70,000

வீட்டுக்கான மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த முஸ்தபா தம்பதி

கோவை: வீட்டின் மின் கட்டணமாக ரூ.70 ஆயிரம் வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கோவை சாரமேட்டைச் சேர்ந்தவர் முஸ்தபா. கூலி தொழிலாளியான இவர் மனைவியுடன் வந்து அளித்த மனுவில்,‘‘எங்கள் குடும்பத்தில் 4 பேர் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மின் ஊழியர்கள், மின்கட்டண ரீடிங் எடுத்தனர். அதன் பின்னர், எங்களது செல்போன் எண்ணுக்கு ரூ.70 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த நாங்கள் மின் அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, ரூ.30 ஆயிரம் மட்டும் செலுத்துங்கள் என்கின்றனர். எங்களுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே வழக்கமாக மின் கட்டணமாக வரும்.

இரு மாதங்களுக்கு முன்னர் ரூ.1,200 கட்டணமாக வந்தது. தற்போது ரூ.70 ஆயிரமாக உயர்ந்தது ஏன் என தெரியவில்லை. ஏதாவது முறைகேடு நடந்ததா, கணக்கீட்டில் தவறா என்பது குறித்து விசாரித்து முறையான கட்டணத்தை நிர்ணயிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

கருமத்தம்பட்டி செல்வபுரம் காலனியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் காலி மது பாட்டில்களுடன் மனு அளிக்க வந்த மக்கள். படம் : ஜெ.மனோகரன்

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, ‘‘செல்வபுரம் காலனியில் முன்னர் இருந்த டாஸ்மாக் மதுக்கடை பொதுமக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் மீண்டும் மதுக்கடை அமைக்க பணிகள் நடைபெறுகின்றன.

மதுக் கடை அமைக்க முற்படும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்பகுதியில் மதுக்கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x