Published : 09 Jan 2023 10:14 PM
Last Updated : 09 Jan 2023 10:14 PM

வரதட்சிணை வழக்கு | ஐபிஎஸ் அதிகாரி சமரசம் கோரியதை ஏற்று ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி: வரதட்சிணை கோரிய வழக்கில் தமிழக காவல்துறை அதிகாரி வருண்குமார் தாமாக முன்வந்து சமரசம் செய்ய கோரியதை ஏற்ற உச்ச நீதிமன்றம், 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ஐஏஎஸ் தேர்வில் பங்கேற்பதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்றபோது வருண்குமார் என்பவரை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இருவர் வீட்டிலும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டனர். 2010-ல் நடந்த தேர்வில் வருண் குமார் வெற்றி பெற்றார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட செலவுகளை சமாளிப்பதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து வருண்குமாருக்கு பணம் கொடுத்தேன்.

2011-ம் ஆண்டு மே மாதம் ஐபிஎஸ் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொள்ள அதிக வரதட்சிணை கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவரது பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். முடிவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வருண் குமார் மறுத்துவிட்டார். அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வருண் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்ஜாமீன் உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த வருண்குமார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து வருண்குமார் பணியிடை நீக்கம் செய்து தமிழிக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தன் மீதான வழக்குகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், வருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக அரசு, வருண் குமார் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், வருண்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தரப்பு பிரியதர்ஷினி தரப்பு வழக்கறிஞரை அணுகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 2011-ம் ஆண்டு முதல் மனுதாரர் பிரியதர்ஷினியின் சட்டப்போராட்டம், நேர விரயம், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்ற காரணங்களுக்காக ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த தொகையை பெற்றுக்கொள்ள விரும்பாத பிரியதர்ஷினி, இந்த தொகையை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நல நிதிக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்படி, அந்த தொகையை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் வருண்குமாருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இருதரப்பும் பரஸ்பரம் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x