Published : 09 Jan 2023 07:40 PM
Last Updated : 09 Jan 2023 07:40 PM
விழுப்புரம்: வருகின்ற 20-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியது, ''தமிழக ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி, வருகின்ற 20-ஆம் தேதி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஆளுநர் தமிழக மக்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து மாநில அரசை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விரோத கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வரும் அவர், ஆர்எஸ்எஸ்சின் அடிமட்ட தொண்டரைப் போல செயல்பட்டு அரசியல் நாகரிகம் பண்பாடு இல்லாமல் சட்டமன்றத்தில் நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் எந்த ஆளுநரும் செயல்பட்டிராத வகையில் ஆளுநர் சட்டமன்றத்தில் அறிக்கையில் தமிழ்நாடு என்று படிக்காமல் தமிழகம் என்று படித்து அரசு தயாரித்த அறிக்கையை முழுமையாக படிக்காமல் சென்றுள்ளார். மாநில சுயாட்சி, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். அமைச்சரவையை அவமானப்படுத்தும் செயலாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் நடந்து கொண்ட செயல்பாட்டில் முதல்வரின் நடவடிக்கை கூட்டாட்சியின் தத்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை கண்டிக்க மறுத்து, பாஜகவின் கொத்தடிமையாக இருப்பதைக் காட்டுகிறார்.
ஊழல் எல்லா இடத்திலும் நடைபெறுகிறது திமுக ஊழல் செய்தால் கண்டிப்பாக கூட்டணி கட்சியாக உள்ள நாங்கள் எதிர்ப்போம். பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி ரபேல் கைக்கடிகாரம் வாங்கினேன் என்று சொல்லமுடியாமல், தமிழக அரசின் பல துறைகளில் ஊழல் செய்வதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறுவதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினால் நல்லதாக இருக்கும்" என்றார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்ட செயலாலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT