சென்னை: இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை செயலகத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.
தமிழில் உரை; கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு: உரையைத் தொடங்கியவுடன் "தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம்" என்று ஆளுநர் தமிழில் தெரிவித்தார். மேலும் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது
- தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது.
- சர்வதேச அளவிலான செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு பிரம்மாண்டமாக நடத்தியது.
- விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் நடக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு பாதுகாத்து வருகிறது.
- இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
- மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது.
- கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
- பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது"
- 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
- பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
- மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.
- 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு.
- புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரிப்பு.
- சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.
- மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- 2,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது
- மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
WRITE A COMMENT