Published : 09 Jan 2023 06:31 AM
Last Updated : 09 Jan 2023 06:31 AM

கோவையில் ரூ.7 கோடியில் நவீன பனீர் ஆலை: ஆவின் மேலாண் இயக்குநர் தகவல்

கோப்புப்படம்

சென்னை: ஊட்டச்சத்து நிறைந்த பனீர் என்னும் பாலாடைக்கட்டி தயாரிப்பை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, கோயம்புத்தூரில் நவீன பாலாடைக்கட்டி தயாரிப்பு ஆலை ஓரிரு மாதங்களில் அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிறபாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, ஆவின் பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உட்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

இந்நிலையில் தமிழகத்தில், வரும் கோடைகாலத்தில் ஆவின்தயிர், மோர், லஸ்ஸி விற்பனையை 50 சதவீதம் வரை அதிகரிக்கவும், ஐஸ்கிரீம் தயாரிப்பை தினசரி 30 ஆயிரம் கிலோவாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல், ஊட்டச்சத்து நிறைந்த பாலாடைக்கட்டி (பனீர்) தயாரிப்பை அதிகப்படுத்தவும் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அம்பத்தூர், திண்டுக்கலில் உள்ள ஆலைகளில் பாலாடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வட, தென் மாவட்ட மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதுபோல, கோயம்புத்தூரில் புதிதாக பாலாடைக்கட்டி தயாரிப்பு ஆலை ஓரிரு மாதங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் நாள்தோறும் 2 ஆயிரம் கிலோ பாலாடைக்கட்டி தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

நவீன இயந்திரம்

இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது. கோயம்புத்தூரில் அமைக்கப்படவுள்ள ஆலையில், ரூ.7 கோடி மதிப்பில் பாலாடைக்கட்டி தயாரிக்கும் நவீன இயந்திரம் நிறுவப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் இந்த ஆலையில் தினசரி 2 ஆயிரம் கிலோ அளவில் பாலாடைக்கட்டி தயாரிக்கப்படும்.

இதன்மூலமாக, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உள்ள மக்களின் புரதச்சத்து உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆவின் பாலாடைக்கட்டி விலையைப் பொறுத்தவரை, தனியார் நிறுவனத்தின் விலையை விட ரூ.10 குறைவு.

வருவாய் அதிகரிக்கும்

தற்போதைய காலத்தில் நவீன உணவாக பாலாடைக்கட்டி உள்ளது. ஊட்டச் சத்துகளும் இதில் நிரம்ப உள்ளன. பெரிய உணவகங்கள், ஓட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் மொத்த விலைக்கு பாலாடைக்கட்டி விற்பனை செய்யப்படும். இதுதவிர, விற்பனையகங்கள், கல்வி நிறுவனங்களில் சில்லறை விற்பனை செய்யப்படும். இதன் ஆயுட்காலம் 30 நாட்கள் ஆகும். மொத்த வியாபாரத்தில் 5 சதவீதமும், சில்லரை வியாபாரத்தில் 10 சதவீதமும் ஆவினுக்கு வருவாய் கிடைக்கும். இது அரை கிலோ, 200 கிராம் எடை அளவில் இருக்கும்.

தற்போது தமிழகத்தில் நாள்தோறும் 2 டன் அளவுக்கு பாலாடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இதை 5 டன் அளவுக்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். விருதுநகர், மதுரை, திண்டுக்கல்லில் பாலாடைக்கட்டி தயாரிப்பை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். கோவையில் நவீனஇயந்திரம் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் தினசரி 2 ஆயிரம் கிலோ அளவில் பாலாடைக்கட்டி தயாரிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x