Published : 09 Jan 2023 06:16 AM
Last Updated : 09 Jan 2023 06:16 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. இதில், சில முக்கிய அறிவிப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தும் அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. கடந்தாண்டு சட்டப்பேரவை முதல் கூட்டம் கரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கிலேயே நடத்தப்படுகிறது.
சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச்செயலகத்துக்கு 9.50 மணிக்கு வருகிறார். ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்குக்குள் வரும் ஆளுநர் தனது உரையை வாசிப்பார். உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார்.
தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான, சில வலியுறுத்தல்களையும் அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றி முடித்ததும், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மறைந்ததால், நாளை அதாவது ஜன.10-ம் தேதி பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்தி வைக்கப்படும். தொடர்ந்து, ஜன.11, 12, 13 ஆகிய 3 தினங்களுக்கு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சட்டப்பேரவைக் கூட்டம், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பங்கேற்கும் முதல் கூட்டமாகும். முதல் வரிசையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எஸ்.ரகுபதி ஆகியோருக்கு நடுவில் 10-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று பேரவையில் அவருக்கு திமுக உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இருக்கை விவகாரம்: பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமியும் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் உள்ளனர். இரு அணிகளாக இவர்கள் பிரிந்தபின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்தும் இருக்கையை மாற்றும்படியும் பழனிசாமி தரப்பு பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், இருக்ககையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கடந்த பேரவைக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது.
இந்த கூட்டத்திலும், மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், பழனிசாமி தரப்பினர் ஆளுநர் உரையில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருக்கை விவகாரத்தில் இன்றும் பழனிசாமி தரப்பினர் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை எழுப்ப முடிவெடுத்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment