Published : 03 Dec 2016 08:47 AM
Last Updated : 03 Dec 2016 08:47 AM

மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியத்துக்கு இந்தியன் வங்கி சார்பில் பொது இடங்களில் சிறப்பு முகாம்: 100 ரூபாய் நோட்டுகளாக விநியோகம்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஓய்வூதியம் பெறுவதற்காக, இந்தியன் வங்கி சார்பில் வெளியிடங்களில் சிறப்பு முகாம் நடத்தி 100 ரூபாய் நோட்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு ஓய்வூதியம் பெறுகின்றனர். இதில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் வங்கி மூலமாகவும், மற்றவர்கள் அஞ்சலகங்கள் மூலமாகவும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், பண மதிப்பு நீக்கத்தை தொடர்ந்து, ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து தட்டுப்பாடாக உள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப் பதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில், அரசு ஓய்வூதியம் பெறும் முதியோரும் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கு மட்டும் 100 ரூபாய் நோட்டுகளாக ஓய்வூதியம் வழங்கும் சேவையை இந்தியன் வங்கி செய்துவருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு இந்தியன் வங்கிக் கிளைகளின் வணிகத் தொடர்பாளர்கள் மூலமாக, வங்கி அல்லாத பொது இடங்களில் முகாம் நடத்தி இவ்வாறு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து எம்கேபி நகர் இந்தியன் வங்கிக் கிளை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வங்கியில் வழக்கமாகவே கூட்டம் அதிகம் உள்ளது. இதில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் நின்று சிரமப்படுவதை தவிர்க்கும் விதமாக, தனி இடத்தில் ஓய்வூதியம் வழங்கத் திட்டமிட்டோம். அவர்கள் சிரமப்படாமல் இருக்க ரூ.100 நோட்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கிறோம்’’ என்றனர்.

இதுபோல, வியாசர்பாடியில் உள்ள மாநகராட்சி 37-வது வார்டு அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்தியன் வங்கி முகாமில் ஓய் வூதியம் பெற்ற விஜயா கூறும்போது, ‘‘இவ்வாறு எங்களுக்கு தனியாக வழங்குவது மகிழ்ச்சி, பாராட்டுக்குரியது. அதேநேரம், ‘பாயின்ட் ஆஃப் சேல்’ இயந்திரம் மூலமாக பதிவு செய்து, பணம் தரும்போது, இணையதள இணைப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதனால், பணம் பெறுவது தாமதமாகிறது. பணம் வராமல் பலர் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். இதை சரிசெய்யவேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x