Published : 14 Dec 2016 12:50 PM
Last Updated : 14 Dec 2016 12:50 PM
சமூக வலைதளங்களில் ஜெயலலிதா, சசிகலா குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்வோர் மீது போலீஸில் புகார் செய்யப்படும் என அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த கடந்த 5-ம் தேதி இறந்தார். இதையடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ள நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவுக்கும், அமைச்சர்களுக்கும் எதிரான கருத்துகள், மீம்ஸ் போன்றவை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக அளவில் உலா வருகின்றன. இவை, அனைத்துத் தரப்பு மக்களிடமும் எளிதில் சென்றடைவதால், அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, அதிமுக அப்பிரிவின் மாநில இணைச் செயலாளரான ராஜ்சத்யன் தனது முகநூலில், “அதிமுகவைப் பற்றியும், ஜெயலலிதாவின் இறப்பு குறித்தும், சசிகலா பற்றியும் தவறான, உண்மைக்கு புறம்பான கருத்துகள் மற்றும் தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவ்வாறு பதிவிடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூறும்போது, “சமூக வலைதளங்களில் சசிகலா குறித்து எதிர்மறையான கருத்துகள் திட்டமிட்டு பரவ விடப்படுகிறது. இதில் 60 சதவீதம் எதிர்க்கட்சிகளின் செயல். எனவே, இதைக் கட்டுப்படுத்தி, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஜெயலலிதா, சசிகலா குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப் குழுக்களிலும் பதிவிடுவோர் குறித்த விவரங்கள் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. அவர்கள் மீது இதுவரை புகார் அளிக்கவில்லை. எனினும், சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு எச்சரித்து வருகிறோம். அதன்பிறகும், தொடர்ந்து இதுபோல செயல்படுவோர் மீது, காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT