Published : 08 Jan 2023 06:51 PM
Last Updated : 08 Jan 2023 06:51 PM
புதுச்சேரி: கோரிக்கைகளை முதல்வர் ரங்கசாமி நிறைவேற்றதால் கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ 3ம் நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.
இச்சூழலில் இன்று இரவு நடக்கும் கலைவிழாவில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி ஏனாம் சென்றடைந்துள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏனாமில் போடப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரத்தையொட்டி கோதாவரி ஆற்றங்கரையிலுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணாராவ் வென்று வந்தார். அவர் கடந்த ஆட்சியில் காங்கிரஸில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். ஏனாமில் கடந்த தேர்தலில் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடாமல் ரங்கசாமி போட்டியிட்டார்.
ஆனால், கோலப்பள்ளி சீனிவாச அசோக் சுயேட்சையாக போட்டியிட்டு முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்து வென்றார். அதையடுத்து பாஜகவை ஆதரிக்கத் தொடங்கினார். அதன்பிறகு மல்லாடி கிருஷ்ணாராவ் தூண்டுதலால் பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எம்எல்ஏ சுமத்தி வந்தார். கடந்தமாதம் சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் வாக்குறுதி தந்தார்.
இச்சூழலில் ஏனாமில் கடந்த 6ம் தேதி கலைவிழா தொடங்கியது. 8ம்தேதி இறுதிநாளில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் முதல்வர் ரங்கசாமி ஏனாம் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் எனக்கூறி கடந்த 6ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை எம்எல்ஏ அசோக் தொடங்கிகினார். நேற்று கடையடைப்பு போராட்டமும் நடந்தது. இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் எம்எல்ஏ ஈடுபட்டு வருகிறார்.
6ம் தேதியன்று முதல்வர் ரங்கசாமியை அநாகரீகமாக எம்எல்ஏ அசோக் விமர்சித்தார் எனக் குறிப்பிட்டு புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எம்எல்ஏ அசோக், ''நான் முதல்வரை விமர்சிக்கவில்லை. மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவைதான் விமர்சித்தேன்'' என்றார். இந்நிலையில் ஏனாமில் நடைபெறும் கலைவிழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். அவருடன் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்எல்ஏக்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலரும் பத்து கார்களில் சென்றனர்.
விஜயவாடாவை மதியம் அடைந்து அங்கு ஓய்வு எடுத்து விட்டு புறப்பட்டு மாலையில் ஏனாமுக்கு முதல்வர் சென்றடைந்தார். போராட்டத்தினால் வழிநெடுக போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர், போலீஸாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். கலைவிழா நடக்கும் பாலயோகி மேதானத்திலும் போலீஸ் காவல் பலபடுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு நடக்கும் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அதேநேரத்தில் இவ்விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தொகுதி எம்எல்ஏ அசோக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...