Published : 08 Jan 2023 04:57 PM
Last Updated : 08 Jan 2023 04:57 PM

பாரம்பரிய முறையில் தயாராகும் அலங்காநல்லூர் ‘மலையாள உருண்டை வெல்லம்’: கலப்படம் இல்லாததால் வரவேற்பு

பராரம்பரிய முறையில் தயாராகும் மலையாள உருண்டை வெல்லம்

மதுரை: தமிழர்கள் பல பண்டிகைகளை கொண்டாடினாலும், தமிழ் பாரம்பரியம், பண்பாட்டோடு உற்சாகமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்தது. இந்த பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி வருகிறது. இந்த பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி வருகிறது.

இவ்விழாவில் முக்கியமாக வீடுகளில் தயார் செய்யும் சர்க்கரை பொங்கலை தித்திக்க செய்வது அச்சுவெல்லமும், மண்டை வெல்லம்தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சுவெல்லம், மண்டை வெல்லம் உற்பத்தி நடந்தாலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் பாரம்பரிய முறையல் தயாராகும் மலையாள உருண்டை வெல்லத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. எந்த கலப்படமும் இல்லாமல் முழுக்க முழுக்க கரும்பு சாறை மட்டும் பிழிந்து தயாராகும் இவர்கள் தயாரிப்பதால் பொங்கல் பண்டிகை சந்தைகளில் மதுரை மலையாள உருண்டை வெல்லத்திற்கு வரவேற்பு உண்டு.

தமிழகத்தில், அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகமாக கரும்பு உற்பத்தியாகிறது. அதனால், வெல்லம் தயாரிக்கும் ஆலைகளும் அதிகமாக வைத்துள்ளனர். விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்து ஆலைகள் அமைத்து அச்சுவெல்லம், மலையாள உருண்டை வெல்லம் தயார் செய்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளநிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் அச்சுவெல்லம், மலையாள உருண்டை வெல்லம் தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது.

திரும்பிய பக்கமெல்லாம் அறுவடை செய்யும் கரும்புகளை பிழிந்து சாறு எடுத்து, பின்னர் அவற்றை பெரிய அண்டாக்களில் கொட்டி காய்ச்சு வருகிறார்கள். அண்டாக்களில் கரும்பு சாறை காய்ச்சுவதற்கு பெரும்பாலும் கரும்பு சக்கையையே எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். பிழிந்த கரும்புசாற்றை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நன்றாக கொதிக்க விடுகின்றனர். சரியான பதத்துக்கு வந்தபின்பு அவற்றை உறைய வைத்து உருண்டைப்பிடிக்கிறார்கள். இந்த உருண்டை வெல்லத்தை இங்குள்ள விவசாயிகள் ‘மலையாள உருண்டை வெல்லம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

ஏனென்றால், இந்த உருண்டை வெல்லம், பெரும்பாலும் கேரளாவுக்கே விற்பனைக்கு அனுப்புகிறார்கள். ஓணத்தின் போது கேரள மக்கள் வீடுகளில் பல்வேறு வகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர். இனிப்பு பலகாரத்தில் மதுரை மாவட்டத்தில் தயாராகும் மலையாள உருண்டை வெல்லம் முக்கிய இடம்பிடிக்கும். தற்போது இந்த உருண்டை வெல்லத்தை கேரள மக்கள் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அதனால், அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார விவசாயிகள், ஆண்டு முழுவதுமே மலையாள உருண்டை வெல்லம் தயார் செய்து அனுப்புகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

மலையாள உருண்டை வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அலங்காநல்லூர் கல்லணை விவசாயி ராஜா கூறுகையில், ‘‘சீனி, மாவு எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க கரும்பு சாறை மட்டும் பிழிந்து இதனை தயார் செய்கிறோம். அதனால், பெரியளவிற்கு இந்த வெல்லத்திற்கு ஈர்க்கும் நிறம் கிடையாது. ஆனால், சுவையில் அடிச்சுக்க முடியாது. கேரளா மக்கள், இந்த வெல்லத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால், கேரளாவுக்கே அதிகம் விற்பனைக்கு அனுப்புகிறோம். தற்போது பொங்கல் பண்டிகை நாட்களில் இந்த வெல்லத்தையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். ஒரு உருண்டையை 100 கிராம் அளவிற்கு பிடிக்கிறோம். 10 கிலோ உருண்டை 450 ரூபாய்க்கு விற்கிறோம். முன்பு 600 வரை விற்றோம். தற்போது பொங்கல் பண்டிகையால் அச்சுவெல்லமும் அதிகம் விற்பனையாவதால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x