Published : 08 Jan 2023 01:01 PM
Last Updated : 08 Jan 2023 01:01 PM
நாமக்கல்: சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை தடை செய்யக்கோரி வருகிற மே 5ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமரஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,"கரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பால், தமிழகத்தில் சுமார் 13 சதவீதம் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல அந்நிய கம்பெனிகள் ஆன்லைன் மூலமாகவும், பிராமாண்டமான சூப்பர் மார்க்கெட்டுகள் மூலமாகவும், பொருட்களை விற்பனை செய்வதால் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி, வணிகவரித்துறையின் டெஸ்ட் பர்ச்சேஸ் போன்றவற்றால் சிறிய வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக்கோரி வருகிற 10ம் தேதி மற்றும் 24ம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வருகிற மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அந்நிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை தடை செய்யக்கோரி முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்படும்.
அந்நிய கம்பெனிகளிடம் இருந்து உள்ளூர் வியாபாரிகளைக் காப்பாற்றும் வகையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளை ஒருங்கிணைத்து, பொருட்களை மொத்தக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான முதற்படியாக, நாமக்கல்லில் இன்று செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடைகளை ஒருங்கிணைத்து மொத்த வியாபாரக்கடையை துவக்கி உள்ளனர். இது மற்ற வணிகர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் இல்லாத பலர் ரோடு ஓரங்களில் குடைகளை அமைத்து செல்போன் மற்றும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இது போன்ற இடங்களில் சமூக விரோதிகள், முறையான அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகளை வாங்கி அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அங்கீகாரம் இல்லாமல் ரோடு ஓரங்களில் செல்போன் சிம் கார்டுகள் விற்பனையை போலீசார் தடை செய்ய வேண்டும்.
நாமக்கல்லில் நகராட்சி சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே கடைகள் அமைத்து விற்பனை செய்து வரும் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு, புதிய கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை வழங்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், நிர்வாகிகள் சீனிவாசன், பத்ரிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT