Published : 08 Jan 2023 04:00 AM
Last Updated : 08 Jan 2023 04:00 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை (ஜன. 9) தொடங்குகிறது.
நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் ஆளுநர், சுமார் 9.50 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தருகிறார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ரவியை வரவேற்று, பேரவைக்குள் அழைத்துச் செல்கிறார். பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசித்து முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசிக்கிறார்.
பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
வரும் 10-ம் தேதி சட்டப்பேரவை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கூட்டத்தை தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது.
வரும் 11, 12-ம் தேதிகளில் கூட்டம் நடத்தவும், தேவைப்பட்டால் வரும் 13-ம் தேதி வரை கூட்டத்தை நடத்துவதற்கும் வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பேரவையில் முன் வரிசையில் அமரும் வகையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூடுவதை முன்னிட்டு, பேரவை வளாகத்தை சுத்தப்படுத்துவது, ஒலிபெருக்கிகளை சோதனை செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணைய ஆவணங்களில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரவைக் கூட்டத் தொடரில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பங்கேற்றால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்டத் தொடரைப் புறக்கணிக்கவும், பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்பாக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 10-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT