Last Updated : 08 Jan, 2023 03:50 AM

 

Published : 08 Jan 2023 03:50 AM
Last Updated : 08 Jan 2023 03:50 AM

ஐயப்ப பக்தர்கள் வருகையால் குமுளியில் களைகட்டிய வர்த்தகம் - 24 மணிநேரமும் செயல்படும் சிப்ஸ் கடைகள்

கூடலூர்: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் குமுளியில் நேந்திரம் வாழைப்பழ சிப்ஸ் விற்பனை களைகட்டியுள்ளது. 24 மணிநேரமும் கடைகளில் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் குமுளி அமைந்துள்ளது. இப்பகுதியில் தேக்கடி படகு போக்குவரத்து, யானை சவாரி, பசுமை நடை என்று சுற்றுலா பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் நிலவும் குளிர் பருவநிலை காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களை கவர்வதற்காக தற்காப்புக்கலையான களரி, பாரம்பரிய கலையான கதகளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இதனால் குமுளி சுற்றுலா நகரமாக மாறிவிட்டது. சுற்றுலாவை சார்ந்து ரிசார்ட்ஸ், ஹோட்டல், ஜீப் இயக்கம், நேந்திரம் சிப்ஸ், ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் உள்ளிட்ட வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கரோனாவினால் இங்கு வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ரிசார்ட்ஸ், தங்கும் விடுதிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இங்குள்ள பல கடைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் வருகையால் இந்நிலை வெகுவாய் மாறியது. மேலும் சபரிமலை சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து குமுளி வர்த்தகம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேந்திரம் வாழைப்பழ சிப்ஸ், அல்வா, மிளகு மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பனை வெகுவாய் அதிகரித்துள்ளது. இதற்காக இங்குள்ள கடைகள் 24 மணி நேரமும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கடைகளிலேயே நேந்திரம் சிப்ஸ் தயாரிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆகவே தனியே குடவுன்களில் அடுப்பு வைத்து சிப்ஸ் தயாரித்து வருகின்றனர். மேலும் அங்கேயே 5 கிலோ, 10 கிலோ அளவிற்கு பேக்கிங்கும் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சிப்ஸ்கடை மேலாளர் ஆரிப் அகமது கூறுகையில், "ஐயப்ப பக்தர்கள் வருகையால் சிப்ஸ், அல்வா விற்பனை வெகுவாய் அதிகரித்துள்ளது. இதற்காக 24 மணிநேரமும் உற்பத்தியும், விற்பனையும் செய்து வருகிறோம். தேங்காய் எண்ணெயில் பொறித்த சிப்ஸ் கிலோ ரூ.300க்கும் இதர எண்ணெயில் பொறித்த சிப்ஸ் கிலோ ரூ.220 முதல் 260 வரை விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.

சென்னையைச் சேர்ந்த டில்லிராஜ் என்ற பக்தர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சென்று திரும்பியதும் ஐயப்பன் கோயில் பிரசாதத்துடன் சிப்ஸ், அல்வா போன்றவற்றை உறவினர்களுக்கு வழங்குவது வழக்கம். அதற்காக தற்போது கொள்முதல் செய்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x