Published : 07 Jan 2023 03:44 PM
Last Updated : 07 Jan 2023 03:44 PM

போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? - ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: ‘சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க விவகாரம் தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது?’ என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், "சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். எனவே, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையருமான நர்மதா நேரில் ஆஜராகியிருந்தார். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "கடந்த 2020-ம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே போலியான நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ் நெம்மிலி, அயக்குளத்தூர் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 982 சதுர மீட்டர் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 286 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீட்டில், 247 கோடியே 46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 38 கோடியே 93 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இழப்பீட்டுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்தும்படி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குபிறகும், அதே ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல். இதுதொடர்பாக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து விளக்கமளிக்க, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அப்போது அரசுத் தரப்பில், "போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, இழப்பீடு பெற்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மொத்தம் 39 கோடி ரூபாய் அளவுக்கு இதுபோல இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "சிபிசிஐடி விசாரணையின் நிலை குறித்தும், திரும்ப வசூலிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறித்தும் ஜனவரி 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆஜரார வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x