Published : 07 Jan 2023 10:55 AM
Last Updated : 07 Jan 2023 10:55 AM

'ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் தர முடியாத கையாலாகாத திமுக அரசு' - ஓபிஎஸ் கண்டனம்

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்

சென்னை: திமுக அரசு ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் தர முடியாத கையாலாகாத அரசாக உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ மாணவியரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சிறந்த செல்வமாம் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் உன்னதமான, தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இவர்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசி பணி நாளன்று அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது.

நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சணக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபர் மாதம் நிலவியது. இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மூன்று மாதங்களாகியும் இந்தப் பிரச்சனை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தற்போது தெரிய வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைத்தான் நிறைவேற்ற முடியவில்லை, அகவிலைப்படி உயர்வை உரிய நேரத்தில் தர முடியவில்லை என்றால், சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தர முடியாத கையாலாகாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இலட்சணம்.

பொதுவாக, நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் உரிய தருணத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஊதியத்திற்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ, வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டே போகிறதே என்ற அச்சம் பாதிக்கப்பட்டோர் மத்தியில் நிலவுகிறது.

மேற்படி நிலைமைக்கு காரணம் பள்ளிக் கல்வித் துறைக்கும், நிதித் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு இருந்திருந்தால், மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாத சூழ்நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும். திமுக அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் உடனடியாக சம்பளம் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x